
பைக் ஓட்ரதுன்னா எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்... ஆனா இன்னிக்கு எனக்கு அது சுவாரஸ்யமா தெரியில... ஏன்னா என் மனசு சரியில்லை... அதுக்கு காரணம்... என் வீட்ல குட்டி பொண்ணுக்கு உடம்பு சரியில்ல...
வீட்ல குழந்தைங்களுக்கு உடம்பு சரியில்லன்னா.... வெளியில நமக்கு வேலையே சரியா போறதில்ல... அந்த கஷ்டம் குழந்தை வச்சியிருக்கிறவங்களுக்குத்தான் தெரியும்....
பொதுவா எனக்கு ஜோசியத்தில நம்பிக்கை இல்லாமத்தான் இருந்தது... ஆனா 2 நாளைக்கு முன்னாடி நான் பிஸினஸ் விஷயமா கரூர் போயிட்டு பஸ்ஸில ரிட்டர்ன் வந்துக்கிட்டிருந்தப்போ என் பக்கத்துல ஒரு பெரியவர் உக்காந்துக்கிட்டு வந்தார்... ரொம்ப நேரமா என்னையே முறைச்சி பாத்துக்கிட்டிருந்தார்... அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நீ கட்டிட பிஸினஸ்தானே பண்றேன்னு கரெக்டா சொன்னார்... என்னால அத நம்பவே முடியல... அப்புறம் என்னைப் பத்தி என்னென்னவோ சொன்னவர் கடைசியா என் பொண்ணுக்கு ஒரு பெரிய கண்டம் இருக்குன்னு சொல்லிட்டு இறங்கிட்டார்.... அவர் சொன்ன மாதிரியே இன்னிக்கு என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கு... அவர் என்கிட்ட கொடுத்த விசிட்டிங் கார்டு இருந்தது ஞாபகம் வந்தது... அதான் அவரை நேர்ல போயி பாத்துட்டு வரலாம்னு பைக்கில போயிட்டிருக்கேன்...
2 மணிநேரம் கழித்து....
மறுபடியும் இப்ப நான் பைக்ல போயிக்கிட்டிருக்கேன்.... ஜோசியரைப் பாத்துட்டு ரிட்டர்ன் போயிக்கிட்டிருக்கேன்.... அவர் சொன்னது என்னால நம்பவே முடியல... நான் ஏதோ தோஷத்துக்கு உள்ளாயிருக்கேனாம்... என்னோட தோஷம் குழந்தையை எப்படி பாதிக்கும்னு கேட்டதுக்கு... பெத்தவங்க பண்ற நல்லது கெட்டது ரெண்டுமே அவங்க பசங்களுக்குத்தான் சேரும்னு பழமொழியைச் சொல்றாரு... சரி அப்படி நான் என்ன பாவம் பண்ணிட்டேன்னு கேட்டதுக்கு... நான் ஏதோ ஒரு கோயிலை இடிச்ச பாவம் பண்ணியிருக்கேன்னு சொன்னாரு... அவரு சொன்னது கரெக்ட்தான்... 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு விக்டர் அபார்ட்மெண்ட்ஸ்னு ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்டினப்போ அங்க ஒரு சிவன் கோயிலிருந்தது... 20 கோடி ரூபா ப்ராஜக்டு. விட மனசு வரல அதனாலஅதை இடிக்க வேண்டிய கட்டாயத்துல இடிச்சிட்டுத்தான் அந்த அபார்ட்மெண்டை கட்டினேன்... ஆனா அது இப்போ அந்தப் பாவம் என் பொண்ணுக்கு கண்டமா வரும்னு நான் கனவுல கூட நினைச்சிப் பாக்கல...
அதைவிட அந்த ஜோசியர் சொன்ன பரிகாரம்தான் எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமா இருந்தது.... நான் இடிச்சி கட்டின அபார்ட்மெண்டுல இன்னமும் அந்தக் கோவிலோட அமைப்பு இருக்குதாம்... அந்த கோயிலைம்ஸத்தை நான் உணர்ந்து அந்த சிவன்கிட்ட வேண்டிக்கிட்டு அந்தக் கோவில் கொடிமரத்துல விழுந்தது கும்பிட்டா எனக்கு அந்த தோஷம் நீங்கிடுமாம்... என் பொண்ணுக்கும் உடம்பு சரியாயிடுமாம்... அதெப்படி நான் கட்டுன அபார்ட்மெண்டுல அந்தக் கோவில் இன்னமும் எப்படி இருக்கும் என்னால நம்பவே முடியல... இருந்தாலும் நேர்ல போயி பாக்கலாம்னு பைக்ல போயிக்கிட்டிருக்கேன்....
4 மணி நேரத்துக்குப் பிறகு...
என்னால நம்பவே முடியல... இப்ப நான் மறுபடியும் பைக்ல போயிக்கிட்டிருக்கேன்... இப்பத்தான் வீட்லருந்து ஃபோன் வந்தது... குழந்தைக்கு உடம்பு சரியாயிடிச்சாம்... எப்படின்னு நான் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க... நான் பைக்ல அந்த விக்டர் அபார்ட்மெண்டுக்கு போனதும் அது ரொம்ப சாதாரணமா நான் கட்டின பில்டிங்காத்தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது... இதுல நம்ம அந்தக் கோயில எங்க போயி தேடுறதுண்ணு யோசிச்சிக்கிட்டிருந்தேன்... சரி.. பில்டிங் மெயின்டனென்ஸ்னு சொல்லி உள்ளே போனேன்... என்ட்ரன்சுக்கு நடுவுல ஒரு வெல்கம் விநாயகரை வச்சிருந்தாங்க... அவரை வேண்டும்போதுதான் எனக்குள்ள ஒரு ஸ்பார்க் வந்தது... நான் இடிச்ச அந்தக் கோயில்லயும் இதே இடத்துலதான் விநாயகர் இருந்தாரு... அந்த இடிஞ்ச கோயிலோட அமைப்பை மனசுல நினச்சிக்கிட்டு இப்போ அந்த விக்டர் அபார்ட்மெண்ட்ஸை சுத்தி வர ஆரம்பிச்சேன்...
விநாயகரைத் தாண்டி உள்ளே போனப்ப எனக்கு இடப்பக்கத்துல அந்த கோயிலோட சின்ன குளம் இருந்ததா ஞாபகம்... திரும்பிப் பார்த்தப்போ ரொம்ப ஆச்சர்யமா இருந்தது... காரணம் அந்தக் குளம் இருந்த இடத்துலதான் இப்ப இந்த அபார்ட்மெண்டுக்கு வாட்டர் சப்ளை செய்ற சம்ப் இருந்தது... பில்டிங் உள்ள நுழைஞ்சதும் கோபுரம் இருந்த இடத்துல உள்பக்கமா துவாரமிட்டு இப்போ லிஃப்ட் இயங்கிக்கொண்டிருக்கு.. கிட்டத்தட்ட ஒரே அமைப்பு... நல்லா நினைவுப்படுத்தி முருகர் சிலை இருந்த இடத்துல போனேன்... அங்க இருந்த போர்ஷன்ல.. இப்ப ஒரு முருக பக்தர் குடியிருக்கார்.... சித்தர் சன்னதி இருந்த இடத்துல ஒரு க்ரிஸ்டியன் ஃபேமலி ஒரு இயேசுநாதர் சிலையிருந்தது... அவரும்கூட ஒரு சித்தர்தானே...
அந்தக் கோயிலோட பிரதான மூர்த்தியான சிவனைப் பார்க்கலாம்னு போன இடத்துல போர்ஷன் எதுவும் இல்லாம காலியா இருந்தது எனக்கு அதிர்ச்சியளித்தது... ஆனால்
இந்த பில்டிங்கை கட்டியது நான்தானே. க்ரவுண்ட் ப்ளோருக்கு வெளிச்சம் தேவைன்னு இந்த இடத்தை விட்டு வச்சது அப்பத்தான் ஞாபகம் வந்தது... இந்த இடத்துக்கு நேர்மேலே ஒரு போர்ஷன் இருப்பது தெரிஞ்சது... ஃபர்ஸ்ட் ப்ளோருல நான் நினைச்ச மாதிரியே ஒரு பெரிய பிஸினஸ்மேன் இருக்கிற வீட்ல. தவறாம பூஜை பண்ற அவரோட மனைவியின் கையால பூஜைகளை நடத்திக்கிட்டு சிவபெருமான் கம்பீரமா அந்தப் போர்ஷன்ல இருந்தாரு அவரைக் கும்பிட்டுக்கிட்டு அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்தேன்...
இப்படி அந்த இடிஞ்ச கோயில்ல ஒவ்வொரு சன்னிதி இருந்த இடத்திலயும் இப்ப ஒவ்வொரு போர்ஷன்ல ஒரு சாமி சிலைகள் வெவ்வேறு வடிவத்துல பூஜைபுரஸ்காரத்தோட இருக்கிறத பாக்கும்போது எனக்கு புல்லரிச்சுது.. இந்த தெய்வம் என்கிற அப்பார்ப்பட்ட சக்தி எப்பவும் தனக்குண்டான அம்சங்களோட எப்பவும் இருந்துக்கிட்டுத்தான் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்...
எல்லாம் சரி... ஆனா ஜோசியர் பரிகாரமா நான் அந்தக் கோயிலோட கொடிமரத்துல விழுந்து வணங்கனும்னு சொன்னது ஞாபகம் வந்தது... கொடிமரம் எப்படி இங்க இருக்க முடியும்னு நான் நினைச்சப்போ... அந்த அபார்ட்மெண்டுக்கு எதிர்பக்கமா குழந்தைகள் விளையாடுற பார்க் கட்டியிருந்தாங்க... அந்த பார்க்ல... வானத்தை எட்டிப்பிடிக்கிற மாதிரி... ஒரு செல்ஃபோன் டவர் இருந்தது...
என் கண்ணுல நீர் வர்றதை என்னால கண்ட்ரோல் பண்ண முடியில... நேரே போயி அந்த செல்ஃபோன் டவருக்கு கீழ விழுந்துக் கும்பிட்டேன்... அப்பத்தான் வீட்லருந்து குழந்ததைக்கு உடம்பு சரியானதா ஃபோன் வந்தது... இப்ப நான் வீ்ட்டுக்கு பைக்கல சந்தோஷமா போயிக்கிட்டிருக்கேன்...
------------------
PEN FRIEND
2ன்ட் ஷிப்ட் முடிச்சிட்டு கிளம்ப கொஞ்சம் லேட்டாயிருச்சு... அதனால ரெகுலரா போக வேண்டிய ட்ரெய்னை மிஸ் பண்ணிட்டேன்.... வரப்போற ட்ரென்தான் லாஸ்ட் ட்ரெய்ன்... நல்ல வேளை இதையாவது மிஸ் பண்ணாம வந்து சேந்தேனே.... என்னை நானே நொந்து கொண்டிருந்த வேளையில் தூரத்தில் நம்பிக்கை நட்சத்திரமாய் என் கடைசி ட்ரெய்னின் ~ஹட்லைட் தெரிந்தது...
ட்ரெய்ன் ஹார்ன், மகாபாரதச் சங்கு போல ஒலித்தது....
பயங்கர காலியாக இருந்த அந்த ட்ரெய்ன் எந்த அவசரமுமில்லாமல் ப்ளாட்ஃபாரத்தில் வந்து நின்றது...
ஏறினேன்...
உள்ளே யாருமில்லை....
அந்த காலி கம்பார்ட்மெண்ட் சற்றே பயமுறுத்தலாக இருந்தாலும்... ஒரு பக்கம் கவர்மெண்ட் நமக்கென்று தனியாக ஒரு ட்ரெய்ன் விட்டிருப்பதை எண்ணி கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொண்டேன்....
அடுத்த ஸ்டேஷன் வந்தது.... என் ஸ்டேஷன் வர இன்னும் குறைந்தது 20 நிமிடாவது ஆகும் என்பதால் ரொம்ப ரிலாக்ஸாக இருந்தேன்....
ஒருவன் மட்டும் ஏறினான்... சுற்றும் முற்றும் பார்த்தான்.... ஏனோ என் எதிரில் வந்து உக்காந்தான்.... சே... இவ்வளவு எடம் இருந்தும் இங்கேயே வந்து உக்காந்து நம்ம ப்ரைவசிய கெடுக்கிறானே என்று கொஞ்சம் கோபம் வந்தது...
நான் என் பேகிலிருந்து இன்றைய பேப்பர் ஒன்றை எடுத்து சு டோ கு புதிரிருந்த பக்கத்தை திருப்பினேன்...
சு டோ கு ஒன்றின் விடையைக் கண்டெறிந்தேன்.... ஆனால் அதை பேப்பரில் எழுத என்னிடம் பேனா இல்லை.... என் எதிரில் உக்காந்திருப்பவனிடம் பேனா இருந்தது....
கேக்லாமா வேண்டாமா....?
ஏதோ ஒருவித ஈகோ என்னை தடுத்தது... ஆனால் நான் அவன் சட்டைப் பாக்கெட்டிலிருக்கும் பேனாவையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டான்...
அவனே பேனாவை எடுத்துக் கொடுத்தான்....
இந்தாங்க சார்... யூஸ் பண்ணிக்கோங்க.... என்று பேனாவை என்னிடம் ஈகோயில்லாமல் கொடுத்தான்
அசடு வழிந்துக் கொண்டே தேங்க்ஸ் என்றேன்...
ட்ரெய்ன் படுவேகமாக போக்கொண்டிருந்தது...
அந்த பேனாவின் மூடி மிக அழுத்தமாக மூடப்பட்டிருந்தது.... அதை திறக்க முயற்சி செய்து முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்....
கொடுங்க சார் நானே ஓபன் பண்ணித் தர்றேன்....
நோ.. நோ... நானே பண்ணிக்கிறேன்.... மறுபடியும் என் ஈகோதான்...
பலமனைத்தையும் பிரயோகித்து... ஒரு வழியாக திறந்துவிட்டேன்....
அந்த நேரம் பார்த்து ட்ரெய்னின் வேகம் காரணமாக காற்று பலமாக வீசியது... என் மடியிலிருந்த அந்த சு டோ கு பேப்பர் திசைக்கொறு பக்கம் பறந்தது.... அதை பிடிப்பதற்காக என் கைகளை பலத்த வேகமாக அசைக்க... ட்ரெய்ன் ஏதோ காரணமாக 'சடன் பிரேக்'கடித்து நின்றது....
ஒரு சின்ன நிசப்தம்... என் கைகள் பேப்ரை பிடித்திருந்தது... ஆனால்.... ஆனால்....
பேப்ரை விலக்கி பார்த்ததும்.... அய்யோ....
என் கையிலிருந்த பேனாவின் கூர்முனை... என் எதிரில் உக்காந்திருந்தவனின் தொண்டையில் ஆழமாக இறங்கியிருந்தது... அவன் வார்த்தை ஏதும் வராமல் கண்களை விரித்துக் கொண்டு திணறிக்கொண்டிருந்தான்...
அடக்கடவுளே....
அவன் தொண்டைக்குழியிலிருந்து இரத்தம்... அவன் சட்டை முழுவதும்....
சே... இப்படியா நடக்கும்....
வெளியே திடீரென்று சங்கு ஒன்று சத்தமாய் ஒலித்தது... இல்லையில்லை அது சங்கு இல்லை ட்ரெய்ன் ஹார்ன் சத்தம்....
பதட்டத்தில் என் மூளை தப்பாக வேலை செய்கிறது....
அடுத்து என்ன செய்வது... அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட வேண்டும்...
அடுத்த ஸ்டேஷன் வந்தது... இறங்கினேன்...
ஒருவன் அதே கம்பார்ட்மெண்டில் ஏறினான்...
என்னைத் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே ஏறினான்... என் உள்ளே வேறு பயம் தொற்ற ஆரம்பித்தது... ஒரு வேளை இவன் என்னை நாளை போலீசில் அடையாளம் காட்டிவிட்டால் என்ன செய்வது...
ஓடிப்போய் மீண்டும் ட்ரெய்னில் ஏறினேன்.... நான் நினைத்தது போலவே அவன் துடித்துக்கொண்டிருந்தவனின் தொண்டையிலிருந்து பேனாவை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்.... அவன் சரிந்து விட்டான்...
இவன் பேனாவுடன் திரும்பி என்னிடம் வந்தான்....
டேய் நீதானே இவனைக் கொண்ணுட்ட... உண்மையைச் சொல்லு... என்று மிரட்டினான்
கொஞ்சமும் யோசிக்காமல் அவனை பிடித்து ட்ரெய்னுக்கு வெளியே தள்ளி விட்டேன்... ஓடுகின்ற ட்ரெய்னில் இருந்து விழுந்த அவன் உடல் துண்டு துண்டாய் சிதறியது....
சே... ஒரே இரவில் நான் இப்படி 2 கொலை செய்வேன் என்று சத்தியமாக நினைத்து பார்க்கவில்லை....
2 வாரங்களுக்குப் பிறகு...
அதே ஸ்டேஷன்...
ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தேன்.... மீண்டும் ஆஃபீசில் லேட் ஆனதால் இன்று அதே ட்ரெய்னை பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது...
வழக்கம் போல் ட்ரெய்ன் காலியாக வந்தது...
ஏறினேன்... உள்ளே ஒரு இனம் புரியாத நடுக்கம்...
அடுத்த ஸ்டேஷன்.... யாரும் ஏறவில்லை... ட்ரெய்ன் மெதுவாக ஊர்ந்து அந்த ஸ்டேஷனை தாண்டியது....
என் தோளில் ஒரு கை விழுந்தது...
அய்யோ... அலறியடித்துத் திரும்பினேன்.... அவன்தான்... அவனேதான்... எனக்கு பேனா கொடுத்தவன்தான்.... அய்யோ பேயாக வந்திருக்கிறான்....
கத்தலாமா வேண்டாமா என்று நான் நினைக்கும்போது அவனே பேசினான்....
பயப்படாதீங்க.... நான்தான்... எனக்கும் ஒண்ணும் ஆகல.... ஜஸ்ட் ஒரு சின்ன இன்ஜூரி... இதோ பாருங்க பேண்டேஜ் போட்டிருக்கேன்... இன்னும் 2 நாள்ல சரியாயிடும்...
நிம்மதி பெருமூச்சு விட்டேன்....
ஆமா அந்த பேனா உங்ககிட்டத்தான் இருக்கா..? என்று கேட்டான்...
அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது... அய்யோ... நான் இவனைக் கொன்றதை போலீசில் சொல்லிவிடுவான் என்று நினைத்து அநியாயமாக ஒருவனை ட்ரெயினிலிருந்து தள்ளி துண்டு துண்டாக சிதறடித்து சாகடித்தேனே....
சாரி சார் அது மிஸ் ஆயிடுச்சி... என்றேன்....
பரவாயில்லை என்றவன்... வந்து நின்ற அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட்டான்....
மீண்டும் தனியாக ட்ரெய்னில் போய்க் கொண்டிருந்தேன்....
என் காலடியில் ஏதோ இருந்தது எடுத்தேன்... பேனாவின் மூடி... அதே பேனாவின் மூடி.... இது... இது எப்படி இங்கே வந்தது...
இந்த மூடியின் பேனா நான் தள்ளிவிட்டவன் கையிலிருந்ததை நினைக்கும்போது எனக்குள் ஏதோ ஒரு பய அமிலம் உழன்று என்னை கலவரப்படுத்தியது...
அப்போது திடீரென்று
டேய்... என்று குரல்....
நான் அமர்ந்திருந்த ஜன்னலுக்கு வெளியே கேட்டது... திரும்பி பார்த்தேன்....
அய்யோ... நான் ட்ரெய்னிலிருந்து தள்ளிவிட்டவன்...
ஓடும் இரயிலில் ஜன்னலுக்கு வெளியே அடிப்பட்ட இரத்தக்காயங்களுடன் என்னைப் பார்த்து கோரைப் பற்களுடன் முறைத்துக் கொண்டிருந்தான்.... கையில் அதே பேனாவை என்னை குத்தும் தோரணையில் பிடித்திருந்தான்... அவனின் கைகளில் 3 விரல்கள்தானிருந்தது...
Harish Narayan
அவளும் ஒரு பெண்தான்
பார்க் ரெயில்வே ஸ்டேஷனில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ஹார்ன் அடித்து கிளம்பியது. ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தில் வளர்ந்ததால் பரபரப்பு வாழ்க்கைக்கு உந்தப்பட்டவன் நான். அதனால் ரன்னிங்கில் ஓடிப்போய் ட்ரெயினில் ஏறினேன். மதிய வேளை என்பதால் கூட்டம் அவ்வளவாய் இல்லை. ஜன்னலோர இருக்கை கிடைத்தது. ட்ரெயினில் போவது சுகம் என்றால் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு ட்ரெயினில் போவது மேலும் சுகம். அதை வார்த்தைகளில் சொல்லி மாளாது... அனுபவிக்க வேண்டும்.
நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன்...
பாட்டு பாட வேண்டும் என்று தோன்றியது.... என்ன பாட்டு பாடலாம் என்று மனதிற்குள் பிடித்த பாட்டுகளை ஓடவிட்டு கொண்டிருந்தேன்... அப்போதுதான் அவளை கவனித்தேன்....
என் எதிர் சீட்டில்...
வெகு அழகாய்...
சே... இவளைப் பார்க்காமல் நாம் பாட்டு பாடிக்கொண்டிருந்தால் நான் வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவன் என்றல்லவா ஆகிவிடும்... என்று அவளை ரசிக்க ஆரம்பித்தேன்...
ரோஸ் கலரில் அவள் கன்னம்...
சிகப்பு இதழ்கள்...
இப்படி கவிதையாய் இருந்தாள்...
பெயர் என்னவாகயிருக்கும் என்று யூகிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தேன்....
அருகில் அவள் தாயும் அமர்ந்திருந்தாள்.... அவள் தாயிடம் உங்கள் மகளின் பெயரென்ன என்று கேக்கலாமா..? சே... நாமாக பேசினால் என்ன நினைப்பார்களோ என்னவோ என்று அஞ்சினேன்...
இப்போது அவளும் என்னைப் பார்த்தாள்...
பார்த்தது மட்டுமல்ல என்னைப் பார்த்து சிரிக்கவும் செய்தாள்....
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை... இவ்வளவு அழகா...
இப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
எனக்கு மிகவும் பரவசமாகயிருந்தது.
மீண்டும் சிரித்தாள்...
உடனே அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது... அருகிலிருக்கும் அவள் தாயை எண்ணி சற்று தயங்கினேன்... சற்று நேரம் கழித்து துணிச்சல் வரவழைத்து அவளை தூக்கி என் மடியில் வைத்துக் கொண்டு ஒரு முத்தம் கொடுத்தேன்...
"உன் பேரென்ன...?" என்று கெஞ்சலாய் கேட்டேன்....
"அம்ம்ம்யயயா..." என்றாள் மழலை மொழியில்....
அவள் தாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்... "அவ பேரு ரம்யா.. அதத்தான் அவ அப்படி சொல்றா... இன்னும் சரியா பேச ஆரம்பிக்கல... 2 வயசுதானே ஆவுது... இனிமேதான் நல்லா பேசுவா...." என்றாள்
"ஹாய் ரம்யா குட்டி... புஜ்ஜிக்குட்டிஈஈ..." என்று ஆசைதீர அழைத்தேன்....
- Harish Narayan
கார் ஓட்டும் சுகமே தனி சுகம்தான்... மனதில் நினைத்துக் கொண்டு ஸ்டியரிங்கை பயங்கர வேகமாக திருப்பினான் பரத். அவனுக்கு வளைவு நெளிவு நிறைந்த பாதைகளில் கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதற்காகவே பிரத்யேகமாக இந்த பாதையை பரத் தேர்வு செய்திருந்தான். இருப்பினும் நேரம் அதிகம் இல்லாததால் மனதளவில் ஒரு சின்ன வருத்தம்.
"பால் வாங்க வேண்டும்.... தாமதமாகப் போனால் பால் காலியாகிவிடும். பிறகு என்ன செய்வது?" நினைக்கும் போதே மனதளவில் ஒரு பயம் தொற்றிக்கொண்டது. மேலும் வேகத்தை கூட்டினான்.
இப்போது ஸ்டியரிங்-இல் முன்பைவிட பயங்கர வேகம் காட்டினான். குறுக்கே யாராவது வந்தால் அவ்வளவுதான். கூழ்..கூழ்.. ஆகிவிடுவார்கள். இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே குறுக்கே ஒரு நாய் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பரத்துக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி. உடனே ஸ்டியரிங்கை நாய்ப் பக்கமாய் திருப்பினான். கார் நேரே போய் அந்த நாயின் மீது ஏறியது. ஏறிய வேகத்தில் நாய் சட்னியாகியது... அந்த நாயின் ரத்தம் கார் கண்ணாடி மேல் தெறித்தது. அதைப் பார்த்த பரத்துக்குள் ஒரு மகிழ்ச்சி உணர்வு ஊடுருவியது. அப்பாடா... என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
உடனே அவன் தோளில் ஒரு கை விழுந்தது.
அலறியடித்துத் திரும்பினான்.
"ஹலோ பாஸ் டைம் ஓவர்..." என்றது அந்தக் கைக்கு சொந்தமான குரல்
"சே! அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா..." என்று அலுத்துக் கொண்டே அந்த வீடியோ கேம் பார்லரிலிருந்து வெளியேறினான் பரத்.
வெளியே அவனது பழைய சைக்கிள் நின்றுக் கொண்டிருந்தது. அதில் ஏறி ஒரு கையில் பால் கிண்ணத்துடன் ஒரு கையில் சைக்கிள் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு கிளம்பினான்.
- - - - - - - - - -
மழைய ரசிக்கிறதே ஒரு தனி சுகம்தான்... அதுவும் சூடான காஃபியோட ஜன்னலோரமா உக்காந்துக்கிட்டு ரசிக்கிறது... இன்னும் சூப்பர் அனுபவம்... அதைத்தான் இப்ப நான் செஞ்சிக்கிட்டிருக்கேன்...
என் பேரு ராகுல்... மழைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்...
ஏன் தெரியுமா... மழை அதிகமா வந்தா ஸ்கூல் லீவ் விட்ருவாங்க... இன்னிக்கும் அப்படித்தான் லீவ் விட்டுட்டாங்க... அதுக்கா மட்டுமில்ல... பொதுவாவே எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும்... இன்னிக்கு மத்தியானத்திலருந்து நான் எங்க வீட்டுக்கு வெளியில மழையில விளையாடிக்கிட்டிருந்தேன்... அம்மா காஃபி கொடுக்க கூப்டாங்கன்னுதான் உள்ள வந்தேன் இல்லன்னா இன்னும் விளையாடிக்கிட்டுத்தான் இருந்திருப்பேன்...
ம்ஹ்ம்....(அழுகுரல்)
என்ன யாரோ அழுற சத்தம் மாதிரி கேக்குதேன்னு பாக்குறீங்களா... அது என்னமோ தெரியில கீழ ஹால்ல.. எங்கம்மாதான் ரொம்ப நேரமா அழுதிக்கிட்டிருக்காங்க... ஏன்னே தெரியில....
அம்மா அழாதேம்மா.... ஏன் அழற நீ..?
இன்னிக்கு காலைல 7 மணியிலருந்து மழை பெஞ்சிக்கிட்டிருக்கு... இப்போ மணி சாயங்காலம் 5 ஆகப்போகுது... இன்னும் மழை விட்டமாதிரி தெரியில....
எங்க வீட்டு ஜன்னல்லருந்து பாத்தா ஒரு பெரிய ஹைவே தெரியும்... வானம் ரொம்ப இருட்டிக்கிட்டே பெய்ற மழைங்கிறதால வண்டிங்கள்லாம் லைட் போட்டுக்கிட்டு ஓட்றாங்க... பாக்கவே ரொம்ப சூப்பராயிருக்கு...
எங்க வீடு கொஞ்சம் ரிமோட்டான ஏரியாவுல இருக்கிறதால எப்பவுமே ரொம்ப அமைதியா இருக்கும்... எப்பவாவது ஹைவே ரோட்ல வண்டி பாஸாகும்போது வர்ற சவுண்டைத் தவிர வேற ரொம்ப வண்டிச்சத்தங்கள் கேக்காது...
ஆனா இப்ப கொஞ்ச நேரமா என்னன்னு தெரியில எங்க வீட்டுக்கு முன்னாடி நிறைய வண்டிங்க வந்து நின்னுக்கிட்டிருக்கு.... நிறைய கெஸ்ட்டுங்க வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்... ஏன்னுதான் தெரியில....
கீழே ஹாலில்... ராகுலின் பிணத்தை நடுவீட்டில் கிடத்தியிருந்தார்கள். ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார்.
பாவம்பா... சின்ன பையன்... 4வதுதான் படிக்கிறான்... வெளியில மழையில விளையாடிக்கிட்டிருந்திருக்கான்... அவங்கம்மா காஃபி சாப்பிட கூப்பிட்டிருக்காங்க... ரோட்டை க்ராஸ் பண்ணி வரும்போது ஒரு லாரி தூக்கியடிச்சிடிச்சாம்...
- - - - - - - -
Subscribe to:
Posts (Atom)